Thursday, 02.02.2023, 04:32pm (GMT+5.5)
  Home
  FAQ
  RSS
  Links
  Site Map
  Contact
 
எதிர்வரும் சந்ததியினருக்காக நாம் சேர்த்து வைக்கும் இணைய பொக்கிசம் கொக்குவில்.கொம்
::| Keyword:       [Advance Search]
 
All News  
  கொக்குவில் பற்றி
  செய்திகள்
  பெரியார்கள்
  பாடசாலைகள்
  கோயில்கள்
  நினைவுகள்
  ஆக்கங்கள்
  வாழ்த்துகள்
  துயர்பகிர்வு
  உதவி
  ::| Poll
இணையத்தள பக்க வடிவமைப்பு :
மிகவும் திருப்தி
திருப்தி
தெரியாது
 
  ::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
பெரியார்கள்
 
கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா
Friday, 01.29.2010, 11:29am (GMT+5.5)

ஏரம்பு சுப்பையா (இ. ஜனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியர்களில் ஒருவர். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.
வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர் அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து தாயகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். அக்காலத்தில் பரத நாட்டியம் பெரிதாகப் பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. அது ஒரு சமூகத்தின் சொத்தாக மட்டுமே இருந்தது. இருந்தாலும் காலப்போக்கில் பாரதத்தில் ஏற்பட்ட சமூக சீர்திருத்தத்தின் காரணமாக சதிர், சின்னமேளம் என வழங்கி வந்த நடனம் பரதம் என்ற பெயருடன் புதுப் பொலிவு பெற்றது. அதற்கு ஈ . கிருஸ்ண ஐயரும், ருக்மிணிதேவி ஆகியோரின் பங்களிப்புமே காரணம். அதன் தாக்கம் இலங்கையிலும் பரவத் தவறவில்லை. இந்திய நடனக் கலைஞர்களின் வருகையினால் உள்ளுர்க் கலைஞர்கள் விழித்தெழுந்தார்கள். அதன் தாக்கமே திரு. ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரத நாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.

திரைப்படங்களில் நடனம்

இந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் சந்திரலேகா, சங்கரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டு அவர்களின் நடனக் குழுவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் நடனமாடி நன்மதிப்புப் பெற்றார். பின்னர் தாயகம் திரும்பி கலைப்பணிகள் செய்வதில் காலடி எடுத்து வைத்தார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

நடனப் பள்ளி நிறுவல்

இதன் பின்னர் தான் அரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் திரு சுப்பையா அவர்களே. அத்துடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார்.

திரு. சுப்பையா அவர்கள் 1949ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1956ல் கொக்குவிலில் கலா பவனம் என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கத களியையும், பரதசூடாமணி அடையார் லட்சுமணனிடம் பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார்.

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராக கடமையாற்றியவர்.

விருதுகளும் பட்டங்களும்

1960ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தது. பின் கலைச்செல்வியினால் நடத்தப்பட்ட கலைவிழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு கலைச் செல்வன் என்ற பட்டமும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

மறைவு

கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது ஐம்பதாவது வயதில் இறையடிசேர்ந்தார்.
விக்கிபீடியாவில் இருந்து

Comments (0)        Print        Tell friend        Top
 
  ::| Events
February 2023  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
 

[Top Page]