
"இலகுவா......ய் நில்
க...வ...னம்
செற்
றெடி
கோ"
கையில்
மாட்டியிருந்த பலகைச் சட்டம் இரண்டையும் ஒரு சேர அடிக்கின்றார்
விளையாட்டுப் பாட மாஸ்டர். ஒவ்வொரு கோட்டு எல்லைக்குள் இருக்கும் வீரர்கள்
தொலைவில் தெரியும் கயிற்று முடிவிடத்தையே கண்கள் நோக்க, விர்ரென எழும்பும்
அம்பு போலப் பாய்கிறார்கள்.
"நாகலிங்கம்! ஓடு ...... ஓடு"
"செல்லையா! விடாதை முந்து"
"டோய் கார்த்திகேசு! செல்லையாவின்ர கோட்டுக்குள்ளை போகாதை",
ஓடும் வீரர்களைக் கலைத்துக் கொண்டு அதுவரை மைதானத்தின் கரையே நின்ற ஒவ்வொரு போட்டி இல்லத்து மாணவர்களும் ஓடுகின்றார்கள்.
வயதுக்கு
வந்த பெண்பிள்ளைகள் மட்டும் ஓடினால் மானக்கேடு என்று, கையைப் பிசைந்து
கொண்டே "கடவுளே....கடவுளே... எங்கட இல்லம் தான் வெல்லவேணும்" என்று ஊரில்
உள்ள அத்தனை தெய்வங்களையும் மைதானத்துக்கு அழைக்கிறார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு ஓட்ட மைதானத்தின் கயிற்று எல்லைகளைக் கடப்பவர்களை கணேசலிங்கம் மாஸ்டரின் சவுக்குப் பிரம்பு பதம்பார்க்கின்றது.
மைதானம்
எங்கும் வெற்றி, தோல்வி, முதலாம் இடம், இரண்டாம் இடம், இதுவே பேச்சு.
மைதானத்தின் கரையெங்கும் அந்தந்த விளையாட்டு இல்லங்களுக்கான கொட்டகை
போடப்பட்டு அந்தந்த இல்ல பாட்ச்களைச் சட்டையில் அணிந்த மாணவர் கூட்டத்தால்
நிரம்பி வழியும். ஒரு போட்டியில் வென்றால் என்ன தேற்றால் என்ன திரும்ப
வரும் வீரனுக்கு குளுக்கோஸ் கொடுக்கவென ஒரு பகுதி மாணவியர் நிற்பார்கள்.
போர்க்களம் சென்று திரும்பும் வீரன் போல பெனியன் தொப்பமாக நனைய நனைய
வீரரும் குளுக்கோஸ் தேடி வருவார். கூடவே வென்றாலும் தோற்றாலும் துணை வரும்
இல்லக் கொடியுடன் ஒருவர்.

"உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? "
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்" என்று.
வருடத்தின்
பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான்
எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான்
முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.
அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக்
கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப்
போட்டிகள் நடைபெறும் காலம்.
முதல் வாங்கில் இருந்து படிப்பில்
முதலாம் இடம் பெறத்துடிக்கும் மாணவர்களைப் புறந்தள்ளிக் கடைசி
வாங்கிலிருந்து வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றிக்கோப்பையைப்
பறிக்கும் மாணவனை இனங்காட்டுவதும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தான்.
ஆறாம்
வகுப்பிலிருந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தான் என் படிப்பு
தொடர்ந்தது. செல்லையா, நாகலிங்கம், கார்த்திகேசு, சபாரத்தினம், என்று
கல்லூரியின் பழைய அதிபர்களின் பெயரே விளையாட்டு இல்லங்களுக்கும் இருந்தது.
பாவியர் போகும் பாதை பள்ளமும் திட்டியும் என்பது போல நான் சேர்ந்த
நாகலிங்கத்தின் நிலை தேர்தலில் நிற்கும் சுப்பிரமணியசாமி போல
கவலைக்கிடமானது. என்னைப் போல ஆட்கள் நாகலிங்கம் இல்லத்தின் அணித்
தேர்விலேயே நாலாம் ஐந்தாம் இடம் எடுக்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள்.

செல்லையா
இல்லக்காரங்கள் தான் தொடர்ந்து பெரும்பாலான ஆண்டுகளின் விளையாட்டுப்
போட்டிகளில் முதலாம் இடம் வருவார்கள். தாங்கள் ஏதோ அவுஸ்திரேலிய கிறிக்கற்
அணி என்ற தோரணையில் போட்டி ஆரம்பமாக முதலேயே வீறாப்புடன் வளைய வருவார்கள்.
அக்னி நட்சத்திரம் பிரபு - கார்த்திக் போல ஆளை ஆளை முறைச்சுப்
பார்த்துக்கொண்டே தம் பயிற்சிகளை எடுப்பார்கள். விளையாட்டுப் போட்டிகள்
ஆரம்பமாவதற்கு ஒரு மாதம் முன்பே மதிய நேர வகுப்புக்கள் காலி. விளையாட்டு
மைதானத்தில் வந்தும் ஒரமாக இருக்கும் மர நிழலில் இருந்து விளையாட்டு
நேரத்திலும் புத்தகமும் கையுமாக இருந்து படிக்கிறவையும் இருக்கினம்.
கொக்குவில்
இந்து கலவன் பாடசாலை என்பதால் விளையாட்டுப் போட்டி நடக்கும் நாட்களில்
பொம்பிளைப்பிள்ளையள் விளையாடுற கூத்தைப் பார்க்க யாழ் இந்து, சென் ஜோன்ஸ்,
சென்றல் பள்ளிக்கூடப் பெடியளும் வந்து மதிலில் இருந்து வேடிக்கை
பார்ப்பினம். வழக்கமாக கண்டிப்புடன் இருக்கும் மகேந்திரன் மாஸ்டரும்
இவர்களைக் கண்டும் காணாமல் கருணை காட்டுவார். இவ்வளவு நாளும் லேடீஸ்
கொலிச், வேம்படிப் பிள்ளையளை சைற் அடிச்சுப் போட்டு இப்ப எங்கட
பள்ளிக்கூடப்பிள்ளையளையும் பார்க்க வந்திட்டாங்கள் என்று உயர்தர வகுப்பு
அண்ணாமார் பெருமுவார்கள்.
என்னைப் போல ஆட்கள் விளையாட்டுப் போட்டி
முடிஞ்ச அடுத்த நாள் தான் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை
அறிவிக்கும் பெட்டியில் ஆசை தீர ஏறிப் பார்க்கலாம்.
நாங்கள் உயர்தர
வகுப்பில் காலடி எடுக்கவும் அவ்ரோ, புகாரா, சியாமாசெற்றி என்று இலங்கை
அரசாங்கம் வானத்தில் வாண வேடிக்கை காட்டவும் சரியாக இருந்தது. இலங்கை
விமானப்படையின் விளையாட்டுப் போட்டிக்கு இடம் கொடுத்து கல்லூரி
விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டன.

